

"பதான் திரைப்படத்தை புறக்கணித்து, அந்தப் படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துங்கள்" என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தைச் சேர்ந்த மத குரு ராஜு தாஸ்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகர்கள் தீபிகா, ஷாருக் அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். இணையவெளியில் இது தொடர்பாக காரசார வாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ், "பாலிவுட், ஹாலிவுட் சினிமா துறைகள் தொடர்ந்து சனாதன தர்மத்தை பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்து கடவுளரை அவமதிக்கின்றன. பதான் படத்தில் தீபிகா படுகோனே அணிந்துள்ள பிகினி உடையின் நிறம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. அதுவும் ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் தான் என்ன?
வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்தப் படம் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் திரையிடப்படுகிறதோ அவற்றையெல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை தான் தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று மத்தியப் பிரதேசத்தின் இந்து அமைப்பினர் சிலர் ‘பதான்’ படத்தை தடை செய்யக் கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மஹாசபாவின் தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், "ஷாருக்கானின் பதான் படத்தில் காவியும், இந்து மதமும் அவமதிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்வி தான் எழுகிறது. நாங்கள் படத்தை தடை செய்யக் கோருகிறோம். இந்தப் படத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்" என்றார்.