

காந்தாரா, புஷ்பா போன்ற படங்களால் சினிமா துறை அழிகிறது என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாக வெளியான தகவலையடுத்து அனுராகை தனது ட்விட்டரில் சாடியுள்ளார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் மூலம் அறியப்படுபவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. அண்மையில் அந்தப் படத்தை இஸ்ரேல் நாட்டு இயக்குநர் ஒருவர் விமர்சித்திருந்ததற்கு காரசார பதில்களைக் கொடுத்திருந்தார். தற்போது காந்தாரா, புஷ்பா போன்ற படங்களால் சினிமா துறை அழிகிறது என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாக வெளியான தகவலையடுத்து அனுராகை தனது ட்விட்டரில் சாடியுள்ளார். இது தொடர்பாக விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாலிவுட்டின் ஒன் அண்ட் ஒன்லி மைலார்ட் கருத்திலிருந்து நான் முழுமையாக மாறுபடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அவருடைய கருத்தை ஆமோதித்து சிலர் பின்னூட்டங்களை வெளியிட இன்னும் சிலர், "பொழுதுபோக்கு இணையதளத்திற்கு அனுராக் அளித்த பேட்டியை விவேக் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. அந்தப் பேட்டியில் அனுராக் கஷ்யப், காந்தாரா, புஷ்பா போன்ற படங்கள் நீங்கள் சொல்ல நினைக்கும் கதையைச் சொல்லும் துணிச்சலைத் தருகிறது. ஆனால் கேஜிஎஃப் 2 போன்ற படங்கள் எத்தனை பெரிய வெற்றிப் படமாக இருந்தாலும் அதனை நீங்கள் எடுத்துக்கொண்டு இங்கொரு படம் செய்ய நினைக்கும்போது அது உங்களை பேரிடரில் ஆழ்த்திவிடுகிறது என்றே கூறியுள்ளார். தலைப்பு வைத்தவர்கள் காந்தாரா, புஷ்பா போன்ற படங்களால் திரைத்துறைக்கு சேதாரம் என்று எழுதியதே பிரச்சினைக்குக் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.