'பொய் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் வீழ்ந்துவிடும்' - அனுபம் கேர் கருத்து

அனுபம் கேர்
அனுபம் கேர்
Updated on
1 min read

பொய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த நடிகரும் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் நடித்தவருமான அனுபம் கேர்.

கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா திங்கள்கிழமையுடன் (நவம்பர் 28) நிறைவடைந்தது. இதில் சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார்.

நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம்.இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொய் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப்பிடிக்காது" என்று பதிவிட்டிருந்தார்.

இன்று காலை மும்பை சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று திரும்பிய அவரிடம் செய்தியாளர்கள் காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட அதற்கு அவர், "இது வெட்கக்கேடானது. எல்லாமே திட்டமிட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக எங்கள் குழு கலந்தாலோசித்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக தகுந்த பதிலளிப்போம்" என்று கூறினார்.

இதேபோல் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்பட்டத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், "காலை வணக்கம். உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும். #CreativeConsciousness " என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்வரா பாஸ்கர் ஆதரவு: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த உலகுக்கே இந்த விஷயம் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் நகோ லாபிடின் கருத்தை ஆதரித்து அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே "ஆப்கானிஸ்தானில் நடக்கும் தலிபான் தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் இந்தியாவில் இந்துத்துவா பயங்கரவாதத்தையும் சகித்துக் கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in