

பாலிவுட் நடிகர் சல்மானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அக்ஷய் குமாருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோயின் கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸே வாலாவை கொலை செய்த வழக்கில் சிறையில் லாரன்ஸ் பிஸ்னோயின் கும்பல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த பாதுகாப்பை உயர்த்தி வழங்கியிருக்கிறது மகராஷ்ரா அரசு.
இதன்மூலம் மும்பை காவல்துறையால் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சல்மான் கானுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் கமாண்டோக்கள் உள்பட 11 ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.
அதேபோல, அக்ஷய் குமாருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் அவரின் பாதுகாப்புக்காக ஷிப்டு முறையில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் உடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் அனுபம் கேருக்கும் அதே அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செலவை பிரபலங்களே ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அக்ஷய் குமாரை பொறுத்தவரை, சமூக ஊடகங்களில் அவருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் காரணமாகவும், அவரின் கருத்துகளாலும் அவருக்கு அச்சுறுத்தல்கள் அவ்வப்போது வருதால் அவருக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.