'டபுள் எக்ஸல்' படம் மூலம் இந்தி சினிமாவில் கால் பதிக்கும் மஹத்

'டபுள் எக்ஸல்' படம் மூலம் இந்தி சினிமாவில் கால் பதிக்கும் மஹத்
Updated on
1 min read

'டபுள் எக்ஸ்எல்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் நடிகர் மஹத் நாயகனாக கால்பதிக்கிறார்.

அஜித்குமார் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகர் மஹத். 'பிக்பாஸ்' என்ற தனியார் நிகழ்ச்சி மூலம் நன்கு அறியப்பட்டவர் அண்மையில், 'ஈமோஜி' என்ற தொடரில் நடித்தார்.

இவர், பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.

படம் குறித்து நடிகர் மஹத் ராகவேந்திரா பேசுகையில், ''சினிமா என்பது பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக இந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால், இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது. சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி. நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது.

எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள் . கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம். இப்படத்தில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குநர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்'' என்றார்.

மேலும், தனது கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், ''ஒரு கதாப்பாத்திரத்தின் திரை நேரத்தை விட அது மக்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதே முக்கியம். அந்த வகையில் இப்படம் எனக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். சத்ரம் ரமணி இயக்கத்தில் நம் காலத்தின் மாபெரும் நாயகிகள் இருவர் இணைந்து நடிக்கும் அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். நான் எப்போதும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையே தேடுகிறேன். தமிழ் படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த இந்தி படம் எனக்கு ஒரு புதிய சவாலையும் புதிய பார்வையாளர்களையும் தந்துள்ளது'' என்றார். 'டபுள் எக்ஸ்எல்' நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in