

மும்பை: பிரபலங்களை விரட்டி படம் எடுக்கும் பபாரஸி புகைப்படக்கார்களிடம் தன்னைப் படம் எடுக்க வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கடிந்து கொண்டுள்ளார் நடிகை டாப்ஸி. இவரது இந்தச் செயலால் நெட்டிசன்கள் அவரை நடிகை ஜெயா பச்சனுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வர இருந்த நடிகை டாப்ஸியை படம் எடுப்பதற்காக புகைப்படக்காரர்கள் காத்திருந்தனர். டாப்ஸியின் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கும்போது புகைப்படக்காரர்கள் படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்த டாப்ஸி, "இப்படிச் செய்யாதீர்கள்..." (ஜஸ் மத் கரோ) எனத் திரும்பத் திரும்பக் கூறி காரின் கதவினை அறைந்து சாத்தினார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோவிற்கு எதிர்வினையாற்றி உள்ள நெட்டிசன்கள், நடிகை டாப்ஸியை ஜெயா பச்சனுடன் ஒப்பிட்டு, இரண்டாவது ஜெயா பச்சன் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றின் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், டாப்ஸியின் சமீபத்திய படமான 'டோபாரா' குறித்த எதிர்மறை விமர்சனம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, “எந்தப் படம் இது மாதிரியான சூழலை சந்திக்கவில்லை” என்று பதில் அளித்தார். நிருபர் மீண்டும் இடைமறிக்க முயன்றபோது, “எனது கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்” என்று நடிகை டாப்ஸி தெரிவித்தார்.
விமர்சகர்களும் படம் குறித்து எதிர்மறையாகவே கருத்து தெரிவிக்கிறார்களே என்று மற்றொரு நிருபர் கேட்டபோது, "எந்த ஒரு கேள்வியை கேட்பதற்கு முன்பாக கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்யுங்கள்" என்றார். தன்னுடை கேள்வியை தெளிவாக கேட்பதற்காக நிருபர் குரலை உயர்த்தியபோது, “கத்தாதீர்கள்... பிறகு நீங்கள் எல்லோரும் நடிகர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று சொல்வீர்கள்” என்று பதில் அளித்தார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகை டாப்ஸி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'டோபாரா' என்ற இந்தி படம் வெளியாகியிருந்தது. இது 'மிரஜ்' என்ற ஸ்பானிஷ் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இது டைம் ட்ராவலர் கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்ட த்ரில்லர் வகை படம். ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.