

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் ‘த்ரிஷ்யம் 2’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் பதாக். வியாகாம் 18 நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு, அக்ஷய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - மலையாள 'த்ரிஷ்யம்2' படத்தின் ட்ரெய்லரை பொறுத்தவரை ஒருவித மகிழ்ச்சியான சூழலைக்கொண்டே அதன் தொடக்கம் இருக்கும். படிப்படியாக கதையின் இறுக்கம் காட்சிகளாக வெளிப்படும். ஆனால், இந்தி ட்ரெய்லரை பொறுத்தவரை, சீரியஸான டோனில் தொடங்கி இறுதி வரை அதன் இறுக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறை அதிகரியாக வரும் அக்ஷய் கண்ணாவுக்கும், அஜய் தேவ்கனுக்குமான காட்சிகள், அவர்கள் இருவருக்குமிடையிலான மன ஓட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எந்த இடத்திலும் கதாபாத்திரங்களின் முகங்களில் மகிழ்ச்சி வெளிப்படாமல் முழுமையான இறுக்கத்துடனேயே காட்சிப்படுத்தபட்டுள்ளது. மொத்த ட்ரெய்லரும் சீரியஸான டோனில் முழுக்க முழக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. படம் நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ட்ரெய்லர் வீடியோ: