நடிகர் அருண் பாலி
நடிகர் அருண் பாலி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அருண் பாலி மும்பையில் காலமானார் 

Published on

மும்பை: 3 இடியட்ஸ், கேதர்நாத், பானிபட், ஹே ராம் போன்ற படங்களில் நடித்திருந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் அருண் பாலி மும்பையில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிகிழமை அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 79.

செய்தி நிறுவனத்திடம் பேசிய அருண் பாலியின் மகன் அன்குஷ்," எனது தந்தை இன்று காலமாகி விட்டார். அவர் மஸ்தீனியா கிரவிஸ் என்ற தசைபிடிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு மூன்று நாட்களாக பதட்டத்துடன் இருந்தார். இன்று தனது உதவியாளரிடம் கழிப்பறைக்கு செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார், வெளியே வந்ததும் உட்கார வேண்டும் என்று கூறியவர் பின்னர் எழவே இல்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அருண் பாலிக்கு மஸ்தீனியா கிரவிஸ் என்ற அரியவகை தசைப்பிடிப்பு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைக்காக அவர் மும்பையில் உள்ள ஹிராநந்தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பாலி பிரபல இயக்குநர் லேக் டான்டனின் தொலைக்காட்சி தொடரான தூஸ்ரா கேவல்-ல் ஷாருகானின் மாமாவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சாணக்கியா, ஸ்வபிமான், தேஸ் மேய்ன் நிக்லா ஹோகா சந்த், கும்கும், ஏக் பியார் ஷா பந்தன் போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானார்

சவுகாந்த், ராஜூ பன் க்யா ஜென்டில்மேன், ஹல்நாயக், ஹே ராம், லகே ரஹோ முன்னா பாய், 3 இடியட்ஸ், ரெடி, பர்ஃபி, கேதர்நாத், ஸ்மார்ட் பிரித்விராஜ், லால் சிங் சந்தா போன்றவை அருண் பாலி நடித்த சில பிரபலமான படங்கள்.

இவர் கடைசியாக நடித்த "குட்பை" படம் அக்.7ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதில் அமிதாப் பச்சன் ராஸ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அருண் பாலியின் மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ட்விட்டர் பயனர் ஒருவர்," கடவுள் அவரது ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் நன்றாக செய்திருப்பார் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர்,"அவர் ஒரு இயல்பான நடிகர். ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர்" நிஜத்தில் உயிருக்கு போராடியும், சினிமாக்களில் வாழ்ந்தும் வந்த அவர், "குட்பை" படம் வெளிவரும் நாளில் நம்மை விட்டுபிரிந்து விட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in