Published : 06 Oct 2022 06:03 PM
Last Updated : 06 Oct 2022 06:03 PM

‘ஆதிபுருஷ்’ படத்தை தடை செய்க: அயோத்தி ராமர் கோயில் தலைமை புரோகிதர் வலியுறுத்தல்

ஆதிபுருஷ் டீசரில் இடம்பெற்ற ஒரு காட்சி.

அயோத்தி: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை புரோகிதர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இதன் மேக்கிங்கை பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, பலரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும்; புறக்கணிக்க வேண்டும் என்று முழங்கி வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் தலைமை புரோகிதர் சத்யேந்திர தாஸும் இப்படம் குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ராமர், ஆஞ்சநேயர் மற்றும் ராவணன் போன்ற கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதற்காக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “இது மாதிரியான படத்தை உருவாக்குவதில் எந்தவித குற்றமும் இல்லை. ஆனால், அது சர்ச்சைக்குள்ளான வகையில் இருக்கக் கூடாது” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்தப் படத்தின் டீசர் அமைந்துள்ளதாக உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா மற்றும் பிரிஜேஷ் பதக் ஆகியோர் தெரிவித்திருந்தனர். ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளை நீக்கத் தவறினால், சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரித்திருந்தார்.

சுமார் 1.46 நிமிடம் ஓடும் இந்த டீசர் கடந்த ஞாயிறு அன்று அயோத்தியின் சரயு ஆற்றங்கரை ஓரத்தில் வெளியிட்டிருந்தது படக்குழு. “இந்து தெய்வங்களுக்கு எதிரான அவமரியாதையை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. மகான்கள் மற்றும் அகோரிகள் என்ன சொன்னாலும் அதில் கவனம் செலுத்துவது அவசியம். திரைப்படங்கள் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றன. அப்போதெல்லாம் நமது கலாச்சாரத்தை காப்பது இந்த துறவிகள் தான்” என உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா மற்றும் பிரிஜேஷ் பதக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

“இந்த டீசரில் வரும் ராவணன் நீல கண்களுடன் வித்தியாசமான ஆடையை அணிந்துள்ளார். அது முற்றிலும் அந்நியமாக உள்ளது” என பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் இந்த டீசருக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் ராமர், லட்சுமணன் மற்றும் ராவணன் ஆகியோரை காட்சிப்படுத்தி உள்ள விதம் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் உள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி மாட்டோம் என அந்த அமைப்பின் பிரச்சார பிரமுக் ஆன அஜய் சர்மா.

“படத்தின் சில காட்சிகளில் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை நீக்க சொல்லி படத்தின் இயக்குனர் ஓம் ராவத்துக்கு கடிதம் எழுத உள்ளேன். அதை நீக்க தவறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வோம்” என மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x