

இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘தேங்க் காட்’. அடுத்தமாதம் 24-ம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், நவீன சித்திரக் குப்தனாக அஜய் தேவ்கன் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து கடவுளான சித்திரக்குப்தனை கோட் சூட் அணிந்து சித்தரித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று ஜான்பூர் வழக்கறிஞர் ஹிமன்சு ஸ்ரீவஸ்தவா என்பவர் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கர்நாடகாவிலும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த சித்திரக்குப்தனின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படும் காயஸ்தர் சமூகத்தினர் இந்தப்படத்துக்கு எதிராக, நாகல்கஞ்ச் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதில், அரைகுறை ஆடையணிந்த பெண்களின் முன், சித்திரக்குப்தனை நவீன உடையணிந்து காண்பித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.