ஆஸ்கருக்கு குஜராத்தி படம் ‘செலோ ஷோ' பரிந்துரை

ஆஸ்கருக்கு குஜராத்தி படம் ‘செலோ ஷோ' பரிந்துரை
Updated on
1 min read

ஆஸ்கர் விருதுக்கு குஜராத்தி படமான ‘செலோ ஷோ’ இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் பங்கேற்க, ஒவ்வொரு வருடமும் இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரை செய்யப்படும். அதன்படி இந்த வருடத்துக்கான படத்தை இயக்குநர் நாகபர்ணா தலைமையிலான 17 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.

இதில், தமிழ், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, ஹிமாசா (அசாம்) மொழிகளில் இருந்து தலா ஒரு படம், இந்தியில் 6 பாடங்கள், தெலுங்கில் 2 படங்கள் என மொத்தம் 13 படங்கள் கலந்துகொண்டன. இறுதியில் குஜராத்தி படமான ‘செலோ ஷோ’ (கடைசி காட்சி) தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இந்தப் படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதை பான் நலின்இயக்கியுள்ளார். பாவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா உட்பட பலர் நடித்துள்ளனர். சினிமாவை பற்றிய திரைப்படம் இது. இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் ரவி கொட்டாரக்கரா கூறும்போது, ‘அனைத்து குழுவினரும் ஒருமித்து தேர்வு செய்த படம் இது. இந்த படம், இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது. தமிழில் இருந்து ‘இரவின் நிழல்’ படம் இடம் பெற்றிருந்தது’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in