

சென்னை: ‘அழகி’ படம் மூலம் தமிழக ரசிகர்களை ஈர்த்த நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமான ‘ஸ்விகாட்டோ’ (Zwigato) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. உணவு டெலிவரி செய்யும் பிரதிநிதியின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நந்திதா தாஸ் இனிஷியேட்டிவ்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் இது. நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட கபில் ஷர்மா இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூசான் மற்றும் டொரோண்டோ போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த இந்தப் படம் தேர்வாகி உள்ளது.
சுமார் 1.39 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் சாமானியராக இருக்கும் ஓர் உணவு டெலிவரி செய்யும் பிரதிநிதியின் போராட்டமிக்க வாழ்வை அப்படியே கேமரா கண்களில் படம் பிடித்து வைத்துள்ளது போல உள்ளது. கரோனா தொற்று காரணமாக தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்தவருக்கு வேலை போன காரணத்தால் அவர் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்கிறார் என சொல்லப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் நடைபெறும் யதார்த்தத்தை அப்படியே சினிமா கதையாக சொல்லியுள்ளார் இயக்குநர் நந்திதா தாஸ். அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம் இது. இது தவிர ஒரு குறும்படம் மற்றும் இசை ஆல்பம் ஒன்றையும் அவர் இயக்கியுள்ளார். நெட்டிசன்கள் இந்தப் படத்தின ட்ரெய்லரை பாராட்டி வருகின்றனர்.