Last Updated : 10 Sep, 2022 01:20 PM

Published : 10 Sep 2022 01:20 PM
Last Updated : 10 Sep 2022 01:20 PM

பிரம்மாஸ்திரா Review: திகட்டும் கிராஃபிக்ஸுடன் வறண்ட திரைக்கதையில் ஏவப்பட்ட அஸ்திரம்

பிரம்மாஸ்திரா பட ஸ்டில்

பிரம்மாஸ்திரத்திற்கான யுத்தத்தில் வென்றது யார் என்பது தான் படத்தின் ஒன்லைன். அனைத்து அஸ்திரங்களுக்கும் மேலான உச்சபட்ச சக்தியை பெற்றிருக்கும் பிரம்மாஸ்திரத்தின் பாகங்கள் வெவ்வேறு நபர்களிடம் பிரிந்து கிடக்கின்றன. அதனை எப்படியாவது சேர்த்து பிரமாஸ்திரத்தின் சக்தியை பெற்றுவிட வேண்டும் என எதிரி கூட்டம் நினைக்கிறது. இந்த சம்பவங்களெல்லாம் ரன்பீர் கபூருக்கு காட்டப்படுகிறது. அவருக்கும் பிரமாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? அவருக்குள் இருக்கும் சக்தி என்ன? இறுதியாக பிரமாஸ்திரத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் திரைக்கதை.

சினிமாவின் பெரும்பாலான ஃபார்மெட்டுகளில் நாயகன் ஒரு ஏழையாகவும், நாயகி பணக்கார பெண்ணாகவும் இருப்பர். அதில் நாயகனின் இரக்க மற்றும் ஏழ்மை நிலையை பார்த்த நாயகிக்கு காதல் தொற்றிக்கொள்ளும். அப்படியான புதுவித காதல் கதையைத் தான் இந்த படத்திலும் தொட்டிருக்கிறார் இயக்குநர் அயன் முகர்ஜி. படத்தில் பிரம்ம சக்தி, வானாஸ்திரம், நந்தியாஸ்திரம் போன்றவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் காதல் முக்கியமான பங்கு வகிக்கிறது.

படம் நெடுங்கிலும் காதலை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காதல் காட்சிகள் மிகவும் பலவீனமான முறையில் எழுதியிருப்பது, படம் பார்ப்பவர்களுக்கு சுத்தமாக ஒட்டவில்லை. கண்டதும் காதல் பாணியிலும், நாயகனின் கருணைகொண்ட உள்ளத்தின் அடிப்படையிலும் உடனே காதல் வயப்படும் பெண்கள் இருந்திருந்தால் என்ஜிஓ-க்கள் நடத்தும் எல்லோருக்கும் ஒன்றிருக்கும் மேற்பட்ட காதல் இருந்திருக்க வேண்டுமே!?

படத்தில் ஆலியா பட்டுக்கும்- ரன்பீர் கபூருக்குமான காதல் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது அயற்சி. தவிர படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பக்குழு. ட்ரெய்லரில் பார்த்த போது சிஜி காட்சிகள் ட்ரால் செய்யப்பட்ட நிலையில்,பெரிய திரையில் கிராஃபிக்ஸ் காட்சிகளை 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது அட்டகாசமான திரையனுபவத்தை கொடுக்கிறது. சவுண்ட் எஃப்க்ட்ஸ், கேமிரா, எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியாக படத்தை நிச்சயம் பாராட்டலாம். ஆனால், அதை மட்டுமே வைத்து எவ்வளவு நேரம் ரசிக்க முடியும் என்ற கேள்வியும் எழாமலில்லை.

ரன்பீர் கபூர் தன்னுடைய மொத்த உழைப்பையும் செலுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக இருந்தது ஆலியா பட்டின் நடிப்பு. சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் மிரட்டலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கைத்தட்டலை பெறுகிறார் ஷாருக்கான். தனக்கான கதாபாத்திரத்தில் முழுமை சேர்த்திருக்கிறார். தவிர, அமிதா பச்சன், நாகர்ஜூனா நடிப்பு திரைக்கதையின் பலவீனத்தை மறைக்க உதவியிருக்கிறது. குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த மௌனிராய் வில்லியாக மிரட்டியிருந்தார். அழுத்தமான நடிப்பால் அச்சுறுத்துகிறார்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. படம் எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்துகொள்ளவே இடைவேளை வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இடைவேளைக்கு முன்பாக காட்சிகள் சூடுபிடிக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதியில் தன்னுடைய திரைக்கதை பலத்தால் அந்த சூட்டையும் அணைத்திருக்கிறார் இயக்குநர்.

அதீத உரையாடலும், தேவையற்ற பாடலும், அயற்சி தரும் காதல் காட்சிகளும், பார்வையாளர்களை பாதிக்காத நாயகனின் ஃப்ளாஷ் பேக் மற்றும் எமோஷனல் காட்சிகளும் பெரும் சோகம். தவிர, இரண்டாம் பாதியில் கன்டென்டே இல்லாமல் இழுத்துச் சென்று நீண்ட நேரம் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருந்து திரைக்கதையின் பலவீனத்தை உணர்த்தியது. படம் முடியும்போது இரண்டாம் பாகம் விரைவில் என்ற கார்டு போடப்படும்போது தான் உண்மையில் பார்வையாளர்களுக்கு அச்சம் தொற்றிக்கொள்கிறது.

இசையமைப்பாளர் ப்ரிதம் இசையில் பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. சைமன் ஃப்ராங்கல்ன் பின்னணி இசை சில இடங்களில் கைகொடுத்தது. தமிழ் டப்பிங்கில் ஆலியா பட்டின் குரலை கேட்க முடியவில்லை.

மொத்தத்தில் பார்வையாளர்கள் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டு வேடிக்கை பாத்திருத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x