

தனக்கும் இயக்குநர் கரண் ஜோகருக்கும் இடையே உள்ள பிரச்சினை தனிப்பட்ட விவகாரம் என்று அஜய் தேவ்கன் குறிப்பிட்டார்.
அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருக்கும் 'ஷிவ்வே' மற்றும் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏ தில் ஹேய் முஸ்கில்' ஆகிய இரண்டு படங்களும் அக்டோபர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம், அதில் கமால் ஆர்.கானிடம் 25 லட்ச ரூபாய் கொடுத்து 'ஷிவே' படம் குறித்த தவறான விமர்சனங்களை பதிவிடச் சொன்னதாக குறிப்பிட்ட அஜய் தேவ்கன் கரண் ஜோஹரை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், "எனக்கும் கரண் ஜோஹருக்கும் இடையே பிரச்சினை தனிப்பட்ட முறையானது, பணி சம்பந்தப்பட்ட முறையானது அல்ல. தனிப்பட்ட பிரச்சினைக் குறித்து நான் பேச விரும்பவில்லை" என்று அஜய் தேவ்கன் தற்போது தெரிவித்திருக்கிறார்.
மேலும், திரையுலகில் 'ஏ தில் ஹேய் முஸ்கில்' படத்துக்கு பிரச்சினை எழும் சூழல் உருவாகியுள்ளது. அதில் பாகிஸ்தான் நடிகர் ஃபாவத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே மகாராஷ்ட்ரா நவ் நிர்மான் சேனா பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள எந்தவொரு படமும் வெளியாகாது என்று தெரிவித்துள்ளது.
'ஏ தில் ஹேய் முஸ்கில்' படத்துக்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்று அஜய் தேவ்கான் கருத்து தெரிவித்துள்ளார். "இதில் நியாயமில்லை. இப்படம் முன்பே முடிந்துவிட்டது. இதை ஒரு பிரச்சினையாக நான் கருதவில்லை ஆகையால் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். எந்தவொரு ஒரு படமும் தடை செய்யப்படக்கூடாது. படங்கள் வெளியாக வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் அஜய் தேவ்கன்.