

நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாக உள்ள 'ஹட்டி' (Haddi) படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நவாசுதீன் சித்திக் நடிக்கும் பாலிவுட் படம் 'ஹட்டி' (Haddi). இப்படத்தை அக்ஷத் அக்சத் அஜய் சர்மா இயக்குகிறார். பழிவாங்கும் கதையை மையமாக கொண்ட இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் 'நவாசுதீன் சித்திக்கா இது' என வாயடைத்துள்ளனர். காரணம் சாம்பல் நிற கவுன் ஒன்றை அணிந்துகொண்டு அடையாளம் காண முடியாத மேக்கப்புடன் அரியணை ஒன்றில் பெண் வேடமிட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார் நவாசுதீன் சித்திக். அவரது இந்தப் புதிய தோற்றம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டரை ஷேர் செய்து, 'ஹேட்ஸ் ஆஃப்' என போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நவாசுதீன், ''குற்றம் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது'' என பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தொடர்பாக அவர் கூறுகையில், ''நான் வித்தியாசமான சுவாரசியமான கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கிறேன். ஆனால், ஹட்டி படத்தின் கதாபாத்திரம் ஒரு தனித்துவமான சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கப்போகிறது. ஏனெனில் நான் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் களமாடபோகிறேன். மேலும் இது ஒரு நடிகனாக என்னை உந்தி தள்ளும்'' என்றார்.
படத்தின் இயக்குநர் அக்சத் அஜய் சர்மா கூறுகையில், ''மோஷன் போஸ்டர் பார்வையாளர்களிடம் ஆர்வத்தை தூண்டும் என நாங்கள் நம்புகிறோம். படப்பிடிப்பை தொடங்க மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.