

இந்தி நடிகை நுபுர் அலங்கர். ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சக்திமான் உட்பட ஏராளமான சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். சுமார் 27 வருடங்களாக நடித்து வரும் இவருடைய கணவர் அலங்கர் ஸ்ரீவத்சவாவும் நடிகர். 49 வயதான நடிகை நுபுர், சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘கடந்த பிப்ரவரியில் சந்நியாசி ஆகிவிட்டேன். புனித யாத்திரைகளுக்குச் செல்வதில் மும்முரமாக இருக்கிறேன். தேவையானவர்களுக்கு உதவுகிறேன். எனக்கு ஆன்மீக நாட்டம் எப்போதும் இருந்தது. இப்போதுதான் முழுமையாக என்னை அர்ப்பணித்துள்ளேன். இது என் விருப்பம். இனி என் வாழ்க்கையில் சினிமா இல்லை. நடித்துக் கொண்டிருந்தபோது, புகழ், வெற்றி பற்றி கவலைப்பட்டேன். இன்று நிம்மதியாக இருக்கிறேன்.
அனைத்து எதிர்பார்ப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். என் கணவருக்கும் என் பாதைத் தெரியும். நான்கு ஜோடி உடைகள், ஒரு ஜோடிசெருப்பு, தினமும் ஒருபச்சைப் பப்பாளி, ஓர் ஆப்பிள் சாப்பிடுவது என வாழ்க்கைமுறையை எளிமைப்படுத்திக் கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.