‘லால் சிங் சத்தா’ தோல்விப் படமா? - பரவும் தகவல்களும் நிலவரமும்

‘லால் சிங் சத்தா’ தோல்விப் படமா? - பரவும் தகவல்களும் நிலவரமும்
Updated on
2 min read

ஆமீர்கானின் 'லால் சிங் சத்தா' திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மறுப்பும் ஒருபுறம் வெளியாகியிருக்கிறது. உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம்.

ஹாலிவுட் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை அதிகாரபூர்மாக மறு ஆக்கம் செய்த பான் இந்தியா முறையில் வெளியான படம் 'லால் சிங் சத்தா. இந்தப் படத்தில் ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.12 கோடியை மட்டுமே வசூலித்தது. முதல் நாள் மந்தமான வசூலுடனே படத்தின் தொடக்கம் இருந்தது. இதற்கு காரணம் 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற சமூக வலைதள பிரசாரம் என கூறப்பட்டது. படம் விமர்சகர்களால் வரவேற்பை பெற்றபோதிலும், சமூக வலைதள பிரசாரம் படத்தின் மீதான எதிர்மறை பிம்பத்தை உருவாக்கியது.

படத்தின் இந்த முதல் நாள் வசூல், கடந்த 13 ஆண்டுகளில் ஆமீர்கானின் படத்துக்கு கிடைத்த மோசமான ஓப்பனிங் இது என்றும் பாலிவுட் வர்த்தக நிபுணர்களால் கருதப்பட்டது. இரண்டாம் நாள் ரூ.7.26, மூன்றாம் நாள் ரூ.8.75 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ.10 கோடி, திங்கட்கிழமை ரூ.7.87 கோடி என மொத்தம் இதுவரை ரூ.45.83 கோடியை படம் வசூலித்துள்ளது. முழுமையாக ரூ.50 கோடியைக்கூட 5 நாட்களில் படம் வசூலிக்காததால் படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் தோல்வியை சந்தித்துள்ளதாக பேசப்படும் நிலையில், ஆமீர்கானின் நண்பர், ''ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் சிறந்த மறு ஆக்கத்தை உருவாக்க அமீர் மிகவும் கடினமாக உழைத்தார். ஆனால், படத்தின் மீதான நிராகரிப்பு அவரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

படத்தின் தோல்விக்கு இணை தயாரிப்பாளராக அமீர் பொறுப்பேற்று, விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஓரளவு ஈடுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக 'பாலிவுட் ஹங்கமா' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், லால் சிங் சத்தாவின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வதந்திகளை மறுத்து, "படம் நஷ்டமடையவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமாக வியாகாம் 18 நிறுவனத்தின் சிஇஓ அஜித் அந்தரே கூறுகையில், ''இந்தப் படத்திற்கு வெளிப்புற விநியோகஸ்தர்கள் என யாருமில்லை. வியாகாம் ஸ்டுடியோஸால் படம் விநியோகிக்கப்படுகிறது. மேலும், முதலில் பணத்தை யாரும் இழக்கவில்லை. இப்படம் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் தோல்வி என்பது ஆதாரமற்ற தகவல்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் தயாரிப்பாளர்களே விநியோகஸ்தர்கள் என்பதால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் தொடர்பான பணத்தை கேட்பது பொய்யான தகவல் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in