Last Updated : 11 Aug, 2022 02:21 PM

 

Published : 11 Aug 2022 02:21 PM
Last Updated : 11 Aug 2022 02:21 PM

லால் சிங் சத்தா Review: ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம் மனதை வென்றதா?

உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.

மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.

வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.

ஆரம்பத்தில் 'ஃபார்ஸ்ட் கம்ப்' படம் மறு ஆக்கம் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு அப்படத்தின் தீவிர ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். காரணம், ரீமேக்குகள் பெரும்பாலும் கைகூடாத திரைமொழியால் அச்சுறுத்தக் கூடியவை. ஆனால், இந்தப் படம் ரீமேக் என கூறப்பட்டாலும், தேவையான இடங்களில் நிலப்பரப்புக்கு தகுந்தாற்போல சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் படத்தை பாதிக்காமலிருந்தது சிறப்பு.

எல்லாவற்றையும் தாண்டி, ஹாலிவுட்டிலிருந்து மிதந்து வந்த அந்த வெண்சிறகு ஆமீர்கானிடம் வந்து சேர்ந்திருக்கிறது. படத்தின் உயிரே அதன் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது.ஆனால், 'பிகே' படத்தின் உடல்மொழி அவ்வப்போது எட்டிப்பார்ப்பை தவிர்க்க முடியவில்லை. பிகேவும் ஃபாரஸ்ட் கம்ப் போன்றவன் தானே.

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், தென்னிந்திய கதாபாத்திரமான நாக சைதன்யாவுக்கான லட்சியத்தை நிர்ணயிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அது தொடக்கத்தில் நகைச்சுவையுடன் அணுகப்படுகிறது. ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கியுள்ளார். 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தைப் பார்த்தவர்களுக்கு ட்ரெயினில் கதை சொல்லத் தொடங்கும் காட்சி சற்று ஏமாற்றம். அது 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் விஜய் கதை சொல்வதைப் போன்ற உணர்வை தட்டி எழுப்பிவிடுகிறது. அதைக் கடந்து சென்றால், சின்னச் சின்ன மாற்றங்களால் சில சர்பரைஸ்கள் உண்டு.

இங்கே சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.

தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. அதேசமயம், முஸ்லிம் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சற்றே தடுமாற்றம். 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.

ஆமீர்கான் - கரீனா இடையேயான கெமிஸ்ட்ரி ஒத்துப்போவதால் காதல் காட்சிகள் உயிர் பெறுகின்றன. கடைசி அரைமணி நேரத்தில் சேர்க்கப்பட்ட பாடல், பொறுமையாக நகரும் காட்சிகளில் மட்டும் ட்ரிம் டூலை பயன்படுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என தொழில்நுட்ப நேர்த்தி படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களான சிறந்த காட்சி அனுபவத்திற்கு உதவியுள்ளது. பிரித்தமின் பிண்ணனி இசை எமோஷனல் காட்சிகளில் காதுகளுக்குள் கரைகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஒரு க்ளாஸிக் சினிமாவை பெரிய அளவில் சிதைத்து துன்புறுத்தாமல், மண்ணுக்கேற்றபடி மாற்றியமைத்ததில் சிற் சில குறைகள் தென்பட்டாலும், 'லால் சிங் சத்தா' வெண் சிறகாக பார்வையாளர்களை வருடிக்கொடுக்க தவறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x