பாலிவுட்டின் கருப்பு பக்கங்களை தோலுரிக்கும் மல்லிகா ஷெராவத்

பாலிவுட்டின் கருப்பு பக்கங்களை தோலுரிக்கும் மல்லிகா ஷெராவத்
Updated on
1 min read

பாலிவுட்டின் கருப்பு பக்கங்கள் குறித்து பேசியுள்ளார் முன்னணி நடிகைகளில் ஒருவரான மல்லிகா ஷெராவத்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் கமலின் தசாவதாரம் படத்தில் நடித்தவர், மணிரத்னத்தின் குரு மற்றும் சிலம்பரசனின் ஒஸ்தி படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பாலிவுட் நாயகிகளில் ஜாக்கி சான் உடன் நடித்தவர் என்ற பெருமை மல்லிகா ஷெராவத்தையே சாரும். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்துவரும் அவர் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளதுடன் பாலிவுட் சினிமாவின் கருப்பு பக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் மல்லிகா அளித்த பேட்டியில், "பாலிவுட்டின் 'ஏ' லிஸ்ட் ஹீரோக்கள் யாரும் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களிடம் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்பதே உண்மை. இது மிக எளிமையானது. தங்களால் கட்டுப்படுத்தக் கூடிய, தங்களுக்கு சமரசம் செய்துகொள்ளும் நடிகைகளையே அந்த நடிகர்கள் விரும்புவார்கள். நான் அப்படிப்பட்டவள் அல்ல. என் ஆளுமையும் அப்படியானது அல்ல. அடுத்தவரின் விருப்பங்களுக்குள் என்னை உட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அந்த சமரசத்துக்கு செல்லவும் நான் விரும்பவில்லை.

ஹீரோக்கள் வரையறுக்கும் சமரசம் என்னவென்றால், அவர்கள் உட்காரச் சொன்னால் உட்கார வேண்டும், நிற்க சொன்னால் நிற்க வேண்டும். இப்படி எதைச் சொன்னாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஏன் அதிகாலை 3 மணிக்கு ஹீரோ உங்களை அழைத்து, ‘என் வீட்டுக்கு வா’ என்று சொன்னால் நீங்கள் உடனடியாக அங்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவரின் படத்தில் இருக்க முடியும். இல்லை வீட்டுக்குச் செல்ல நீங்கள் மறுத்தால் அவரின் படத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள்" என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் உலகில் கவனிக்கப்படும் நிகழ்வாக மாறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in