

பாகிஸ்தானின் கலைஞர்களை தீவிரவாதிகள் போல் நடத்தக் கூடாது என பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.
முன்னதாக யூரி தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் வான்வழியாக தரையிறங்கி துல்லிய தாக்குதலை நடத்தினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் திரைப்படக் கலைஞர்கள் இந்தியாவுக்குள் வர இந்தியன் மோசன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சங்கம் வியாழக்கிழமை தடை விதித்தது. இந்தத் தடைக்கு கலைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் நடிகர்கள் மீதன இந்த தடை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், ''பாகிஸ்தான் நடிகர்கள் கலைஞர்கள். அவர்களை தீவிரவாதிகளைப் போல் நடத்த வேண்டாம். தீவிரவாதத்தையும், கலையையும் இணைக்க வேண்டாம்'' என்றார்.
பாகிஸ்தான் கலைஞர்கள் மீதான இந்தத் தடையைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவுக்கு இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பாடகர்கள் அமனட் அலி, அதிஃப் அஸ்லாம் தங்களது பயணத்தை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.