

உணவு என்பது ருசிக்கானதல்ல; மாறாக அது உங்களின் உடல் உறுதியைக் கூட்டுவதற்கானது என்று பாலிவுட் நடிகர் அனில் கபூர் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் மிகவும் கண்டிப்பான ஃபிட்னஸ் விதிமுறைகளை பின்தொடரும் நடிகர்களில் முக்கியமானவர் அனில் கபூர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார்.
அந்த வீடியோவிலேயே தான் எப்படி ஃபிட்டாக இருக்கிறேன் என்பதையும் அவர் விளக்குகிறார். நாள்தோறும் 7 மணி நேரம் 24 நிமிடம் உறங்குவதாகவும், கவனத்தை ஒருமுகப்படுத்த அம்பு ஏறியும் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறுகிறார்.
மேலும், உணவுக் கட்டுப்பாடு தொடர்பாக பேசும் அவர், ''சில நேரங்களில் நாம் செய்யும் உடற்பயிற்சியை விட டயட் மிக முக்கியமானது என கருதுகிறேன். உணவு ருசிக்கானதல்ல; மாறாக அது உங்களின் உடல் உறுதியைக் கூட்டுவதற்கானது. உங்கள் உடலுக்கும் மன வலிமைக்கும் தேவையானதையே நீங்கள் உட்கொள்கிறீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப்பார்க்கும் அவரது ரசிகர்கள், 'நீங்கள் எங்களின் இன்ஸ்பிரேஷன் சார்' என கமென்ட் செய்து வருகின்றனர்.