

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மனம்' படத்தை ரீமேக் செய்ய சஞ்சய் லீலா பன்சாலி விருப்பம் தெரிவித்ததாக இயக்குநர் விக்ரம் குமார் தகவல்
அக்கினேனி நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனா, நாக சைந்தன்யா, ஸ்ரேயா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் 'மனம்'. 2014ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தற்போது வரை இப்படம் எந்தவொரு மொழியிலும் ரீமேக் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'மனம்' பட இயக்குநர் விக்ரம் குமார் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலியை சந்தித்தார். அது குறித்து, "அண்மையில் மும்பையில் சூட்டிங் சென்றிருந்தபோது, அவரை சந்தித்தேன். இந்தி ரீமேக் தொடர்பாக அவரிடம் பேசினேன். அந்த பேச்சுவார்த்தையின் போது எந்த உறுதியான முடிவும் எட்டப்படடவில்லை என்றாலும், அவரது தயாரிப்பில் 'மனம்' படத்தை ரீமேக் செய்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று விக்ரம் குமார் தெரிவித்தார்.
இப்படத்தை தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரையும் வைத்து இயக்க விக்ரம்குமார் திட்டமிட்டார். "சூர்யாவை 'மனம்' ரீமேக் தொடர்பாக சந்தித்தேன். ஆனால், இறுதியாக '24' தான் சாத்தியமானது. தமிழில் இப்படம் சாத்தியமாகும் என்று நான் நினைக்கவில்லை" என்று விக்ரம் குமார் தெரிவித்தார்.