

மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட்டில் அர்ஜுன் தாஸ் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு 86 புதுமுகங்களைக் கொண்டு மலையாளத்தில் உருவான படம் 'அங்கமாலி டைரீஸ்'. படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. செம்பன் வினோத் கதை எழுத, லிஜோ ஜோஸ் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 'கேடி என்ற கருப்புதுரை' படத்தை இயக்கிய மதுமிதா சுந்தர ராமன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த இந்தி ரீமேக்கில் 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்; இதன் மூலம் மூலம் பாலிவுட்டில் அவர் அறிமுகமாகிறார் என நம்பத் தகுத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வசந்த பாலனின் 'அநீதி', பிரபு சாலமனின் 'கும்கி 2', கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' ஆகியப் படங்களிலும் அர்ஜுன் தாஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நடிகர் சூர்யா தான், அர்ஜுன் தாஸை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வற்புத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.