பச்சன் பாண்டே முதல் பிருத்விராஜ் சாம்ராட் வரை: 2022-ல் இதுவரை படுதோல்வி அடைந்த பாலிவுட் படங்கள்

பச்சன் பாண்டே முதல் பிருத்விராஜ் சாம்ராட் வரை: 2022-ல் இதுவரை படுதோல்வி அடைந்த பாலிவுட் படங்கள்
Updated on
3 min read

இந்த ஆண்டு தற்போது வரை பாலிவுட்டில் வெளியாகி படுதோல்வியடைந்த படங்கள் குறித்தும், அவை வசூலித்த தொகை குறித்தும் பார்ப்போம்.

பச்சன் பாண்டே: அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி ஃபஹத் சாம்ஜி இயக்கத்தில் வெளியான படம் 'பச்சன் பாண்டே'. தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் ரீமேக் தான் இந்த 'பச்சன் பாண்டே'.

க்ரீத்தி சனோன், பாபி டயோல் நடிப்பில் வெளியான இந்தப்படம் ரூ.165 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. ஆனால், படத்தின் ஒட்டுமொத்த வசூல் வெறும் ரூ.49.9 கோடி தான். படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

ஜெர்ஸி: ஷாயித் கபூர் நடிப்பில் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெர்ஸி'. தெலுங்கில் நானி நடிப்பில் உருவான ஜெர்ஸி படத்தின் ரீமேக்கான இந்தப்படம் அதன் டைட்டிலேயும் சேர்த்தே ரீமேக்காக எடுத்துக்கொண்டது.

ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மொத்தம் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்து நஷ்டமடைந்தது.

ஹீரோபண்டி 2 : அஹமத் கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃப், நவாசுதீன் சித்திக் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'ஹீரோபண்டி 2'.

ஏப்ரல் 29-ம் தேதி ரிலீசான இப்படம் முதல் நாளிலிருந்தே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெறும் ரூ.24 கோடியை மட்டுமே வசூலித்து மோசமான தோல்வியை சந்தித்தது.

ஜெயேஷ்பாய் ஜோர்தார்: திவ்யாங் தக்கர் இயக்கத்தில் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ரன்வீர் சிங், ஷாலினி பாண்டே நடித்த படம் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்'. இந்தப் படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ரூ.90 கோடி பட்ஜெட்டில் மே 13-ம் தேதி வெளியான இந்தப் படம் ரூ.15 கோடியை மட்டுமே வசூலித்தது.

தாகத்: ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த மே 20-ம் தேதி வெளியானது 'தாகத்'. பாலிவுட்டின் மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் என்றால் அது 'தாகத்' தான்.

கங்கனாவின் கரியரிலும் படுதோல்வியை சந்தித்த படம். ரூ.85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வெறும் ரூ. 2.65 கோடியை மட்டுமே வசூலித்து இந்த ஆண்டில் தோல்விப் படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சாம்ராட் பிருத்விராஜ்: அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'சாம்ராட் பிருத்விராஜ்'. வரலாற்று படமான இது வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை அள்ளி குவித்தது. ஆனால், படத்திற்கு முன்னதாக அக்‌ஷய் குமார் படம் மெகா ஹிட் அடிக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் வாயிலாக பாடபுத்தகங்களில் சாம்ராட் பிருத்விராஜின் வரலாற்றையும் சேர்க்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், படத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலித்தது ரூ.60 கோடி என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in