

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா, அமிதாப் நடிப்பில் உருவான 'பிரம்மாஸ்திரா' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவடைந்தது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் வெளியீட்டைத் தாமதப்படுத்திக் கொண்டே வந்தது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால், பின்னர் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று அறிவித்தனர். கரோனாவால் இந்த அறிவிப்பும் தள்ளிபோட, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் 9-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. அதிக VFX காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன. வழக்கமான புராண சினிமா + சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படம் என வசனங்கள் மூலம் தெரிய வருகிறது. மிகுதியான VFX காட்சிகள் ட்ரெய்லரில் இருப்பது, கார்ட்டூன் படம் போன்ற அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லர் இங்கே...