

63-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற அமிதாப் பச்சன், குடியரசுத் தலைவர் தனது உரையில், அவரைப் பற்றிக் குறிப்பிட்டதை எண்ணி நெகிழ்ந்திருக்கிறார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பிக்கு படத்தில் வங்காள தந்தையாக சிறப்பாக நடித்தமைக்காக, இந்திய அரசு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கி கவுரவித்தது.
விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அமிதாப் பச்சனை 'நம்மிடையே வாழும் மாபெரும் கலைஞன்' என்று குறிப்பிட்டார். இது குறித்து அமிதாப், குடியரசுத் தலைவரின் உரையால் நெகிழ்ந்துவிட்டேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ''டெல்லியில் இருந்து இதோ காலை 3:54- க்கு, தேசிய விருதுடன் திரும்பிவிட்டேன். இந்தியக் குடியரசுத் தலைவரின் உரையில் என் பெயரும் இடம்பெற்றதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
விருது வழங்கும் விழாவுக்கு அமிதாப் பச்சனோடு அவரின் மனைவி ஜெயா, மகன் அபிஷேக் பச்சன், மகள் ஸ்வேதா நந்தா, மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் சென்றிருந்தனர்.
பிக்கு படத்துக்காக விருது பெறும் பச்சனுக்கு தேசிய விருது புதிதல்ல. அக்னீபாத், பிளாக், பா ஆகிய படங்களுக்காக மூன்று முறை விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.