

'83' படத்திற்கு பிறகு ரன்வீர் சிங் நடிக்கும் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் 13-ம் தேதி வெளியாகிறது.
பாலிவுட் இயக்குநர் திவ்யாங் தக்கர் (Divyang Thakkar) இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படம் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' (Jayeshbhai Jordaar). ஆதித்யா ஜோப்ராவின் யாஷ் ராஜ் ஃப்லீம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் உடன் ஷாலினி பாண்டே, தீக்ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகவேண்டிய இந்தத் திரைப்படம் ஒமைக்ரான் கொரோனா வகை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மே13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடும் நாயகன் குறித்து கதை என ஏற்கெனவே படக்குழு தெரிவித்திருந்தது.
அண்மையில் `ஃபெமினா ப்யூட்டிஃபுல் இந்தியன்ஸ் 2022’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்வீர் சிங் இந்த படம் குறித்து பேசுகையில், ''திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் அழுகை வரும். ஒருவேளை வரவில்லை என்றால், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவி ஒருவர், 'மது அருந்திவிட்டு வரும் ஆண்கள், பள்ளி மாணவிகளை தொந்தரவு செய்கிறார்கள்' என கூறும்போது, அந்த ஊரின் தலைவர், 'பெண்கள் பயன்படுத்தும் சோப்பை தான் தடை செய்ய வேண்டும். அதனால்தான் ஆண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்' என்ற காட்சியிலிருந்து ட்ரெய்லர் தொடங்குகிறது. படம் முழுவதும் பெண்ணடிமைத்தனத்தையும், ஆணாதிக்க சிந்தனையும் கொண்ட கதை என்பது தெளிவாகிறது.
அடுத்து ரன்வீர் சிங்குக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருப்பதால் அந்த குழந்தையை காப்பாற்ற அவர் ஊரை விட்டே ஓடிவிடுகிறார். அதையடுத்து அவரைத் தேடும் படலம் தொடர இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லும் படமாக ஜெயஷ் பாய் ஜோர்தார் இருக்கும் என தெரிகிறது. பாலிவுட்டின் சமீபத்திய படங்கள் முக்கியமான கருப்பொருளை மையமாக வைத்து வெளிவருவது பாராட்டுகுரியது.