

யஷ், சஞ்சய் தத் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள 'கே.ஜி.எஃப் - இரண்டாம் அத்தியாயம்' இன்னும் இரண்டு தினங்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 'கே.ஜி.எஃப்' உடன் சேர்த்து தமிழில் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படமும் வெளியாகவுள்ளது. அதேநேரம், இந்தியில் ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக்கான இந்தப் படத்தின் வெளியீடு இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தி வட்டாரங்களில் 'கே.ஜி.எஃப்' படத்துக்கான வரவேற்பு அதிகமாக இருந்து வருவதை அடுத்து, 'ஜெர்ஸி' படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. 'கே.ஜி.எஃப்' முதல் பாகம் வட இந்திய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்காரணமாக இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனை அங்கு நடந்துள்ள டிக்கெட் முன்பதிவை வைத்தே அறிந்துகொள்ளலாம். வட இந்தியாவில் இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில் மட்டும் ரூ.11 கோடி அளவில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தை பொறுத்தவரை இந்திய பதிப்பில் 5 கோடி ரூபாய் அளவில் முன்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்திப் பதிப்பு உள்ளடக்கிய மற்ற மொழிகளைச் சேர்த்து வட இந்தியாவில் இதுவரை மொத்தம் முன்பதிவில் மட்டும் 'கே.ஜி.எஃப் 2' திரைப்படத்தின் டிக்கெட்டுகள் 20 கோடி ரூபாய் அளவில் விற்றுத் தீர்ந்துள்ளன. வட இந்தியாவில் 'கே.ஜி.எஃப் 2' மீதான இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய்யின் 'பீஸ்ட்' படம் இந்தி டப்பிங் உடன் வெளியாக இருப்பதால் இப்போது 'ஜெர்ஸி' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆதிக்கம் அதிகமாகி வரும் நிலையில், அதற்கு இந்தி படங்கள் பாதிப்பாகி வருவது பேசுபொருளாகி உள்ளது.