

'கே.ஜி.எஃப் 2' படம் மூலம் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தனது இறுதிமூச்சு வரை நடிப்பேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத். வெடிகுண்டு வழக்கில் சிறை சென்று வந்த அவருக்கு கேன்சர் பாதிப்பும் ஏற்பட்டது. அதிலிருந்து பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டு வந்துள்ளவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். யஷ்ஷின் 'கே.ஜி.எஃப்' இரண்டாம் அத்தியாயத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சஞ்சய் தத், படம் ஏப்ரல் 14-ல் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான புரமோஷன் நிகழ்வுகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இதனிடையே, சினிமாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளது குறித்து பேசியுள்ள அவர், "நான் ஒரு நடிகன், கடவுள் அனுமதித்தால் எனது வாழ்நாளின் இறுதிமூச்சு வரை நடிப்பேன். நான் செய்யும் பணிகளை மிக விரும்புகிறேன். நான் நடிக்கும் கேரக்டர்களையும் விரும்பியே ஏற்கிறேன். 45 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இன்று நிறைய இளம் திறமையாளர்கள் சினிமா துறைக்கு வருகின்றனர்.
யஷ்ஷை பார்க்கும் போது 20 -30 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்ப்பது போல் உள்ளது. இந்த வயதில் அவரின் சாதனைகளை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. ரன்பீர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இவர்கள் அனைவரின் வளர்ச்சியும், அவர்கள் இருக்கும் இந்திய திரையுலகில் நானும் ஓர் அங்கமாக இருக்கிறேன் என்பதும் எனக்கு பெருமையே" என்று உருக்கமாக பேசியுள்ளார்.