

மும்பை: அச்சமற்ற நடிகனாக உருவாவதற்கு எனக்கு அடித்தளம் தந்தது வீதி நாடகங்கள்தான் என்று ஆயுஷ்மான் குரானா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விக்கி டோனர் படத்தின் வாயிலாக 2012 பாலிவுட்டில் அடிஎடுத்து வைத்தவர் ஆயுஷ்குமான் குரானா. தொடர்ந்து சுப்மங்கள் சாவ்தான், அந்தாதூன், ஆர்டிகிள் 15, உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகனாக வலம்வருபவர். ஐந்து வருடங்கள் தொடர்ந்து நாடகங்களில் நடித்து கடும் பயிற்சி பெற்றவர். கல்லூரி நாட்களில், சிம்லாவில் உள்ள கெய்ட்டி தியேட்டரிலும் பல நாடகங்களில் ஆயுஷ்மான் நடித்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சண்டிகரில் இயங்கிவரும் நாடகக் குழுக்களான DAV கல்லூரியின் ஆகாஸ் மற்றும் மஞ்ச்தந்திராவின் நிறுவன உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். இன்று மார்ச் 17ல் உலக நாடக தினம் (World Theatre Day) கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆயுஷ்மான் குரானா வெளியிட்டுள்ள நடிப்புக் கலைஞர்களுக்கான ஒரு டானிக் அறிக்கை:
''இன்று நான் ஒரு திரைக் கலைஞனாக இருப்பதற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை தந்தது தெரு நாடகங்கள்தான். எனது நடிப்புக்கான முயற்சி அங்கிருந்துதான் தொடங்கியது, மக்களை திறமையால் மகிழ்விக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு நாடகங்கள் ஏற்படுத்தின. உண்மையில் ஓர் அச்சமற்ற நடிகனாக ஆவதற்கு வீதி நாடகங்கள்தான் எனக்கான அடித்தளத்தை அமைத்துத் தந்தன. நான் ரிஸ்க் எடுக்க பயப்படவில்லை. இதற்காக நாடகத்துறைக்குத்தான் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனெனில் நான் இன்றுள்ள இடத்திற்கு வந்துள்ளதற்கு என்னை வடிவமைத்துக்கொடுத்தது நாடகங்கள்தான்.
நான் ஒரு நல்ல கலைஞனாக மாற வேண்டும் என்றால், எந்தத் தடைகளும் எனக்கு இருக்கக் கூடாது. நாடகமானது சுய வெளிப்பாட்டின் எல்லையற்ற வடிவம் ஆகும், ஒரு நல்ல நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை நிரூபிக்க தொடர்ந்து சவால்மிகுந்த பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் ஈடுபாடு இருக்கவேண்டும். நாடகங்கள் மூலகமாக நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளவும் முடியும். சமூகத்தை பற்றி மட்டுமல்ல நாம் என்னவாக மாறுகிறோம் என நம்மைநாமே விமர்சித்துக்கொள்ள முடியும்.
நான் தியேட்டரில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன், ஒரு நாடகக் கலைஞனாக இருந்தால் கலையானது உங்கள் நடிப்பின் எல்லையை நோக்கித் தள்ளவும் உங்களுக்கு சவால் விடுகிறது, இதனால் நீங்கள் பார்வையாளர்களை மிகவும் ஆழமாக ஊடுருவி மகிழ்விக்க முடியும். நான் நாடகம் நடிப்பதில் இருந்து கற்றுக்கொண்டதைக் கொண்டு நான் சினிமாவில் நடிப்பதற்கும் ஸ்கிரிப்ட் தேர்வுக்கும் அவற்றைப் பின்பற்ற முயற்சிக்கிறேன்.
இன்றும் நாடகம் மற்றும் நாடக நடிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதற்காக நேரம் ஒதுக்கி சிறந்த நாடக நிகழ்ச்சிகளைக் காண முயல்கிறேன்.'' இவ்வாறு ஆயுஷ்மான் குரானா தெரிவித்தார்.