

தீபிகா படுகோனின் 'கெஹ்ரையான்' படத்தை நடிகை கங்கனா ரனாவத் குப்பை என விமர்சித்துள்ளார். பாலிவுட் வட்டாரத்தில் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் 'கெஹ்ரையான்' நேற்றுமுன்தினம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் தொடர்பாக தீபிகா படுகோனை, கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளம் மூலமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1965ல் மனோஜ்குமார் நடிப்பில் வெளியான ’ஹிமாலே கி காட் மேன்’ என்ற படத்தின் சூப்பர் ஹிட் பாடல் வீடியோவை பின்னணியாக ஒலிக்கவிட்டு, அதில், "நானும் இந்த தலைமுறையைச் சேர்ந்தவள் தான். மில்லினியல் வகையான காதலை நான் அடையாளம் கண்டு புரிந்துகொள்கிறேன்.
ஆனால், தயவு செய்து நியூ ஏஜ், நவீனத் திரைப்படம் என்கிற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்றத் திரைப்படங்கள் எப்போதும் தரமற்றவைதான். எந்த வகையான ஆபாசத்தை காட்டியும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. இது மிகவும் அடிப்படையான உண்மை. கெஹ்ரையானில் எந்தவித ஆழமான கருத்துக்களும் சொல்லப்படவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தீபிகா படுகோனின் இதே 'கெஹ்ரையான்' படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது தொடர்பாக கங்கனா ரனாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'மற்றவர்களின் படத்தை நான் விளம்பரப்படுத்த மாட்டேன்' என்று கூறியவர், இன்று விமர்சனம் செய்துள்ளார்.