

புதுடெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவை ஒப்பிட்டு கருத்து பதிவிட்ட கங்கனா ரனாவத்துக்கு பழம்பெரும் நடிகை ஷபனா ஆஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஈரானில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் எவ்வாறு ஆடை அணிந்திருந்தார்கள், தற்போது எவ்வாறு அணிகிறார்கள்’ என்பதை விளக்கி, புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனைக் குறிப்பிட்டு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் , ”நீங்கள் உங்கள் தைரியத்தைக் காட்ட விரும்பினால் ஆப்கானிதானில் புர்கா அணியாமல் இருந்து காட்டுங்கள். விடுதலையைக் கற்று கொள்ளுங்கள்... குகைக்குள் அடைப்படுவதை அல்ல...” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் பதிவை பழம்பெரும் பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி குறிப்பிட்டு, “எனக்கு ஒன்றை தெளிவுப்படுத்துங்கள்... நான் கூறுவது தவறு என்றால் திருத்தவும். ஆப்கானிஸ்தான் மதவாத நாடு, ஆனால் நான் கடைசியாக பார்த்தவரை இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நாடாகத் தானே இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டிய போராட்டங்களும், எதிர் போராட்டங்களும் நடந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.