

ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிக்கும் ‘சலாம் வெங்கி’ படப்பிடிப்பு தொடங்கியது.
நடிகை ரேவதி 2002-ம் ஆண்டு இயக்கிய ’மித்ர மை ஃப்ரெண்ட்’ திரைப்படம் தேசிய விருது வென்றது. 2004-ம் ஆண்டு இயக்கிய ’ஃபிர் மிலேங்கே’ திரைப்படமும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. தற்போது ‘சலாம் வெங்கி’ என்ற படத்தை ரேவதி இயக்குகிறார். இப்படத்தில் கஜோல் நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு முதலில் ‘தி லாஸ்ட் ஹுர்ரா' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது ‘சலாம் வெங்கி’ என்று மாற்றப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப். 11) தொடங்கியுள்ளது. இதனை கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் கஜோல் “சொல்லப்பட வேண்டிய ஒரு கதை, தேர்வு செய்யப்படவேண்டிய ஒரு பாதை, கொண்டாடப்பட வேண்டிய ஒரு வாழ்க்கை ஆகியவற்றுக்கான ஒரு பயணத்தை நாங்கள் தொடங்குகிறோம். நம்ப இயலாத இந்த உண்மைக் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.