Published : 09 Feb 2022 06:22 AM
Last Updated : 09 Feb 2022 06:22 AM

மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் பீமன் கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன் குமார் காலமானார்

பிரவீன் குமார் சோப்தி

புதுடெல்லி: மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் பீமன் கதாபாத்திரத்தில் நடித்தவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபழம்பெரும் தடகள வீரருமான பிரவீன் குமார் சோப்தி (74) நேற்று முன்தினம் இரவு காலமானார்.

டெல்லி அசோக் விஹார் பகுதியில் சோப்தி வசித்து வந்தார். அவருக்கு நாள்பட்ட மார்பக நோய்த்தொற்று இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினர் வீட்டுக்கு மருத்துவரை அழைத்தனர். எனினும் சோப்தி மாரடைப்பால் காலமானார்.

பல்வேறு சர்வதேச தடகளப் போட்டிகளில் சங்கிலி குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் இந்தியா சார்பில் சோப்தி பங்கேற்றார். 1966 மற்றும் 1970-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்கள் வென்றார். 1966-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் சங்கிலிகுண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் 1988-ல் பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் பீமனாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் இவர் நடித்துள்ளார்.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கடந்த 1991-ல் தமிழில் வெளியான ‘மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தில் கமல்ஹாசனின் உதவியாளராக பிரவீன் குமார் சோப்தி நடித்திருந்தார். இவர் நடித்த ‘பீம்பாய்’ கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x