லதா மங்கேஷ்கருக்காக ஷாரூக்கான் துவா - நெட்டிசன்களை உணர்வுபூர்வமாக நெகிழவைத்த வைரல் காட்சி

துவா செய்யும் ஷாரூக்கான் (இடது) பிரணாம் செய்யும் அவரது மேலாளர் பூஜா தட்லானி | வைரல் புகைப்படம்.
துவா செய்யும் ஷாரூக்கான் (இடது) பிரணாம் செய்யும் அவரது மேலாளர் பூஜா தட்லானி | வைரல் புகைப்படம்.
Updated on
2 min read

மும்பை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இறுதிச்சடங்கின்போது ஷாரூக்கான் இஸ்லாமிய முறைப்படி துவா செய்தும், அவரது மேலாளர் இந்து முறைப்படி பிரணாம் செய்ததும் அடங்கிய புகைப்படமும் வீடியோவும் நெட்டிசன்களால் உணர்வுபூர்வ எழுத்துகளுடனும் ஸ்மைலிகளுடனும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.

பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இறுதிச் சடங்கு நேற்று (ஞாயிறு) மாலை மும்பை ஷிவாஜி பார்க்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். திரைப் பிரபலங்கள் ஷாரூக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ஷாரூக்கான் தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மேலாளர் பூஜா தட்லானியும் இருந்தார்.அப்போது ஷாரூகான் தனது கைகளைக் குவித்து (இஸ்லாமியர்கள் தொழுகையின்போது குவிப்பது போல்) துவா செய்தார். அருகிலிருந்த தட்லானி இருகரம் கூப்பி இந்து முறைப்படி பிரணாம் செலுத்தினார். இந்தப் புகைப்படத்தையும், சிறு வீடியோவையும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் வைரலாக்கினர்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான சாட்சி இப்புகைப்படம் என உணர்வுபூர்மாகக் கொண்டாடுகின்றனர். எந்தவித வெறுப்புப் பிரச்சாரமாக இருந்தாலும், இந்தியாவின் ஆன்மாவான இந்த ஒற்றுமையை சிதைக்க முடியாது என்று கூறி நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ishwar Allah tere naam,⁰sabko sanmati de bhagwan
pic.twitter.com/qIckax0T9x

— Rana Safvi رعنا राना (@iamrana) February 6, 2022

இதிலும் சர்ச்சையா? - சமூக வலைதளவாசிகள் இந்தப் புகைப்படத்தைக் கொண்டாடி வர, இதிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஹரியாணா பாஜகவைச் சேர்ந்த அருண் யாதவ் என்ற நபர். இவர் ஹரியாணா பாஜகவின் ஐடி பிரிவு மாநில பொறுப்பாளர் எனக் கூறப்படுகிறது. அவர் ஷாரூக்கான் துவா செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’ஷாரூக்கான் இறுதியில் மாஸ்கை விலக்கிவிட்டு என்ன செய்கிறார். ஒருவேளை அவர் உமிழ்கிறாரா?’ என்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஷாரூக்கான் தனது துவாவை நிறைவுச் செய்து ஓதுகிறார்; அதனை தவறாக சித்தரித்துள்ள அருண் யாதவை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

क्या इसने थूका है pic.twitter.com/RZOa2NVM5I

— Arun Yadav (@beingarun28) February 6, 2022

விடைபெற்றார் லதா மங்கேஷ்கர்: கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்காக ஷாரூக்கான் துவா செய்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக கவனம் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in