லதா மங்கேஷ்கரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம்- ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

லதா மங்கேஷ்கரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம்- ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
Updated on
1 min read

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் சினிமா, அரசியல் சார்ந்த பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காணொளி ஒன்றை வெளியிட்டு லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இது நம் அனைவருக்கும் மிகவும் சோகமான ஒரு நாள். லதா மங்கேஷ்கர் போன்ற ஒருவர் பாடகர் மட்டுமல்ல, அவர் ஓர் அடையாளம். அவர் இந்தியாவின் ஆன்மாவின் ஒரு பகுதியாக இருந்தார். இந்துஸ்தானி இசை, உருது, ஹிந்தி, மற்றும் பெங்காலி போன்ற பல மொழிகளில் அவர் பாடியிருக்கிறார். இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

அவருடனான நினைவு என் அப்பாவிடம் என்னை கொண்டு செல்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா இறந்து போனார். அவரது படுக்கையின் அருகில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் ஒன்று இருக்கும். அவர் காலையில் எழும்போது அவரது முகத்தைப் பார்த்தபடியே எழுவார். இது அங்கிருந்துதான் தொடங்கியது. அவரோடு சில பாடல்களை பதிவு செய்தது, அவரோடு சேர்ந்து பாடியது என்னுடைய பாக்கியம். மேடையில் பாடுவதை பற்றிய மிக முக்கியமான விஷயங்களை நான் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.”

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in