

எகிப்து நாட்டைச் சேர்ந்த ரசிகருக்கு நடிகர் ஷாருக்கான் அனுப்பிய கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஹரியானாவில் பிரபல பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்வினி தேஷ்பாண்டே என்பவர் வெளியிட்ட பதிவை அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். அஸ்வினி தேஷ்பாண்டே சில தினங்கள் முன் எகிப்து செல்ல திட்டமிட்டு எகிப்தில் உள்ள டிராவல் ஏஜென்ட் ஒருவரை அணுகியுள்ளார். அந்த டிராவல் ஏஜென்ட்டுக்குப் பணம் அனுப்பும்போது, பரிவர்த்தனையில் சிக்கல் எழ பணம் அனுப்புவது தாமதமாகியுள்ளது.
அப்போது அந்த டிராவல் ஏஜென்ட், "நீங்கள் ஷாருக்கான் நாட்டில் இருந்து வருகிறீர்கள். நான் உங்களை நம்புகிறேன். உங்களுக்காக நான் முன்பதிவு செய்கிறேன். நீங்கள் எனக்கு பிறகு பணம் செலுத்தினால் போதும். வேறு யாருக்கும், நான் இதைச் செய்யமாட்டேன். ஷாருக்கானுக்காக இதை செய்கிறேன்" என்று சொல்லி அஸ்வினிக்காக தனது பணத்திலேயே முன்பதிவு செய்துள்ளார்.
பின்னர் எகிப்து பயணத்தின் போது டிராவல் ஏஜென்ட்டை நேரில் சந்தித்த அஸ்வினி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார். கூடவே, ஷாருக்கானின் 'SRK's Red Chillies Entertainment' நிறுவனத்தை டேக் செய்து, ஷாருக்கானின் புகைப்படம் ஒன்றையும், டிராவல் ஏஜென்ட் மகள் பெயருக்கு ஆட்டோகிராப் ஒன்றையும் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று ஷாருக்கானும் எகிப்து டிராவல் ஏஜெண்டுக்கு பதிலளித்து அவரின் மக்களுக்கு ஆட்டோகிராப் உடன் கூடிய மூன்று புகைப்படத்தையும், கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.
ஷாருக்கான் அந்த கடிதத்தில் "எனது சக இந்தியரிடம் இத்தனை அன்புடன் நடந்து கொண்ட உங்களுக்கு என் நன்றி. உங்களிடம் அன்பு மற்றும் தாராள பண்பு நிறைந்திருக்கிறது. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் பெருகட்டும்" என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். ஷாருக்கான் இந்தச் செயல் வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான் முக்கியமானவர். அவர் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும், அவ்வப்போது ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில மாதங்கள் முன் ஆர்யன் கான் போதை விவகாரத்தால் ட்விட்டருக்கும் முழுக்கு போட்டவர், சில தினங்கள் முன் மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்க தொடங்கினார். இதனால் அவரின் ரசிகர்கள் அண்மையில் '#WeMissyouSRK' எனும் ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.