

தென்னிந்தியப் படங்களிலிருந்து பாசிட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமே தனக்கு வருவதாக சோனு சூட் கூறியுள்ளார்.
கரோனா முதல் அலையின்போது புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடிகர் சோனு சூட் ஏராளமான உதவிகளைச் செய்தார். இரண்டாம் அலையின்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவும் சோனு சூட் ஏற்பாடு செய்தார். இதனால் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏராளமான சமூக சேவைகளைச் செய்து வந்ததில் சோனு சூட் திரைப்படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''நான் எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை நான் கண்டுகொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பிறருக்குக் கொடுப்பதை விட மிகச்சிறந்த அனுபவம் எதுவும் இல்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். என் வாழ்க்கையில் இதுதான் என்னுடைய மிகச்சிறந்த கதாபாத்திரம் என்று சொல்வேன்.
நிஜ வாழ்க்கையில் நான் செய்துகொண்டிருப்பது இப்போது திரையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. சமூகப் பிரச்சினைகள் மற்றும் தனி மனிதன் ஒருவன் பிறருக்கு உதவி செய்வது தொடர்பான கதைகளுடன் இயக்குநர்கள் என்னை அணுகுகிறார்கள். கடந்த காலங்களில் பல தென்னிந்தியத் திரைப்படங்கள் என்னை வில்லனாகக் காட்டியிருக்கின்றன. ஆனால், இப்போது அதே தென்னிந்தியப் படங்கள் பாசிட்டிவ் கதாபாத்திரங்களை மட்டுமே எனக்கு வழங்குகின்றன.
என்னை எதிர்மறை தோற்றத்தில் காட்டினால் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. இவை அனைத்துமே எனக்கு விசேஷமானவை. ஆனால், ஒரு நடிகனாக நான் எப்போதும் புதிய விஷயங்களை ஆராய விரும்புகிறேன்''.
இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.