

மாணவிகளுக்கு 1000 சைக்கிள்களை வழங்கவுள்ளதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.
கரோனா முதல் அலையின்போது புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடிகர் சோனு சூட் ஏராளமான வசதிகளைச் செய்தார். இரண்டாம் அலையின்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவும் சோனு சூட் ஏற்பாடு செய்தார். இதனால் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மோகாவில் மாணவிகள் மற்றும் சமூக சேவகர்களுக்கு 1000 சைக்கிள்களை சோனு சூட் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் மோகாவைச் சுற்றியுள்ள 45 கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், ''மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கும் அவர்களது சொந்த கிராமங்களுக்கும் அதிக தூரம் என்பதால் கடும் பனியில் அவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்வது கடினமாக உள்ளது. இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய அவர்களுக்கு உதவும் விதமாக 8 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு 1000 சைக்கிள்களை இலவசமாக வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். சமூக சேவர்களுக்கும் நாங்கள் சைக்கிள் வழங்கவுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.