

சன்னி லியோனின் சமீபத்திய பாடலுக்கு மதுராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தடை கோரியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
’மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ’ என்ற பாடல் 1966 ஆம் ஆண்டு வெளியானது. முகமத் ரஃபியால் பாடப்பட்ட இப்பாடல் மிக பிரபலமானது. இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடி இருக்கிறார்.
இந்த நிலையில் இப்பாடலில் சன்னி லியோன் நடனம் ஆடி இருப்பதற்கு மதுராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாமியார் சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறும்போது, “அரசு சன்னி லியோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரது வீடியோ ஆல்பத்தை தடை செய்யாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். சன்னி லியோன் நடித்த காட்சியை வாபஸ் பெற்று, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
மதுபன் பாடல் கிருஷ்ணா, ராதாவுக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடல். இப்பாடலில் சன்னி லியோனின் நடன அசைவுகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்களும் விமர்சித்துள்ளனர்.