எதிர்பார்த்த வசூல் இல்லை - பாக்ஸ் ஆபீஸில் திணறும் ‘83’

எதிர்பார்த்த வசூல் இல்லை - பாக்ஸ் ஆபீஸில் திணறும் ‘83’
Updated on
1 min read

ரன்வீர் சிங் நடித்துள்ள '83' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 முதல் 14 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் '83' . கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர். இப்படம் கடந்த டிசம்பர் 23 அன்று உலகமெங்கும் வெளியானது.

இந்நிலையில் ‘83’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 முதல் 14 கோடி என்று கூறப்படுகிறது. இது ‘சூர்யவன்ஷி’, ‘ஸ்பைடர்மேன்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூலோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான ‘சூர்யவன்ஷி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.26.29 கோடி வசூல் செய்து, கரோனாவுக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக இருந்து வந்தது. இந்த வசூல் சாதனையை சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்து முறியடித்தது. கடந்த வாரம் வெளியான ‘புஷ்பா’ முதல் நாளிலேயே ரூ.45 கோடி வசூலித்து இந்த இரண்டு படங்களின் வசூலையும் பின்னுக்குத் தள்ளியது. அந்த வகையில் இந்த படங்களின் சாதனையை ‘83’ திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது.

தற்போது இந்தியாவில் ‘ஒமைக்ரான்’ தொற்று அதிகரித்து வருவதால் ஒரு சில மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் வசூலில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in