

1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது ‘83’. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் பிரியர்களும் மிகவும் எதிர்பார்த்த இப்படம் நிறைவாக இருந்ததா? - இதோ முதல் பார்வை...
கபில் தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்து பயணிக்கிறது. ஆரம்பம் முதலே உள்ளூர்க்காரர்கள் முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வரை இந்திய அணியின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அரை இறுதி ஆட்டத்துக்கு முன்பாகவே ரிட்டர்ன் டிக்கெட் கூட போட்டு விடுகின்றனர். மைதானத்திலேயே இந்தியாவைச் சேர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் கபில் தேவின் காதுபடவே கேவலமாக பேசுகின்றனர். அந்தளவுக்கு இந்திய அணி என்றாலே அனைவரும் இளக்காரமாக பார்க்கின்றனர். எனினும் கேப்டன் கபில் தேவ் தன் அணியின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்.
அனைத்து அவநம்பிக்கைகளையும் பொய்யாக்கும் வகையில் முதல் இரண்டு மேட்ச்களில் வெற்றிபெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது இந்திய அணி. தொடர்ந்து ஒவ்வொரு ஆட்டமாக முன்னேறி இறுதி ஆட்டத்தில் வென்று உலகக் கோப்பையை இந்திய அணி எப்படி வென்றது என்பதே ‘83’ படத்தின் கதை.
அனைவருக்கும் தெரிந்த கதையை படமாக்குவது என்பதே ஒரு சவால். அதிலும் நாடே பெருமை கொண்ட ஒரு தருணத்தை படமாக்குவது என்பது கூடுதல் சவால். இந்த சவாலை இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைப்படமாக கொடுத்ததில் இயக்குநர் கபிர் கான் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.
படத்தில் பாராட்டுவதற்கான விஷயங்கள் அநேகம் உண்டு. முதலில் ரன்வீர் சிங். படத்தில் எந்தக் காட்சியிலும் திரையில் இருப்பவர் ரன்வீர் என்ற உணர்வே பார்வையாளர்களுக்கு எழாமல் கபில் தேவாகவே வாழ்ந்திருக்கிறார். நடை, உடை, பேச்சு, உடல்மொழி என அனைத்தையும் கபில் தேவிடமிருந்து அப்படியே நகலெடுத்து நடித்திருக்கிறார். அடுத்து படத்தின் ஒளிப்பதிவு. ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான கச்சிதமான ஒளிப்பதிவை அசீம் மிஸ்ராவின் கேமரா அற்புதமாக படமாக்கியுள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பார்வையாளனின் உணர்வை படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு கடத்துவது எளிதல்ல. உதாரணம் மேற்கிந்திய அணியின் பவுலிங் காட்சிகள்.
படத்தில் பாராட்டப்படுவதற்கான விஷயங்கள் இருக்கும் அதே அளவுக்கு குறைகளும் உண்டு. முக்கியமாக படம் முழுக்க பயணிக்கும் சினிமாத்தனம். ஒரு பயோபிக்கையோ அல்லது ஒரு பிரபலமான தருணத்தை பதிவு செய்யும்போது இருக்கவேண்டிய குறைந்தபட்ச இயல்புத்தன்மை கூட பல காட்சிகளில் இல்லை. ஆங்காங்கே காமெடி என்கிற பெயரில் அவர்களே ஜோக் சொல்லி சிரித்துக் கொள்கிறார்கள். ஜீவா தொடர்பான நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே விதிவிலக்கு. பார்வையாளர்களை வலிந்து எமோஷனலாக்க முயற்சிக்கும் வசனங்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா எனும்போது காட்சி வழியே பார்ப்பவர்களை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டுமே தவிர வசனங்களை இட்டு நிரப்பக் கூடாது. ‘டங்கல்’, ‘சக் தே இந்தியா’, ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
ரன்வீர் தவிர்த்து படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் மான் சிங்காக வரும் பங்கஜ் திரிபாதியும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தாக நடித்துள்ள ஜீவாவும். இருவருமே தாங்கள் வரும் அனைத்து காட்சிகளிலும் அலட்சியமாக ஸ்கோர் செய்து மற்றவர்களை ஓரங்கட்டி விடுகிறார்கள். தீபிகா படுகோனே அழகாக இருக்கிறார். நடிக்க பெரிதாக எந்த காட்சியும் இல்லை. இசை, எடிட்டிங் என டெக்னிக்கல் அம்சங்கள் அனைத்தும் படத்தை தூக்கி நிறுத்த கைகொடுத்துள்ளன.
ஸ்போர்ட்ஸ் படங்களில் இறுதியில் கதாபாத்திரங்கள் பெறும் வெற்றி பார்வையாளனுக்கும் பாதிப்பையும் ஏற்படுத்த வேண்டும். அந்த வெற்றியை நம் வெற்றியாக நினைக்க வைக்க வேண்டும். அப்படி எந்தவொரு உணர்வையும் படம் ஏற்படுத்தவில்லை. 1983 கிரிக்கெட் தொடர்பாக வாய்வழியாக கேட்ட விஷயங்களை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பதும் பெரிதாக எடுபடவில்லை.
கிரிக்கெட்டை வைத்து மதக்கலவரத்தை கட்டுப்படுத்துவது, இளவயது சச்சின், உண்மையான கபில் தேவ் கேமியோ என பல சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.
இது மோசமான படமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் பார்வையாளனுக்கு இருக்கவேண்டிய எமோஷனல் தொடர்பு இல்லை என்பதைத் தாண்டி போரடிக்காத ஒரு பொழுதுபோக்கு சினிமா இந்த ‘83’.