

‘83’ படத்தின் கிளிம்ப்ஸ் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் திரையிடப்பட்டது.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் '83' . கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். இதற்காக கபில் தேவ் நேரடியாகவே ரன்வீர் சிங்கிற்கு பயிற்சி அளித்துள்ளார். படத்தில் கபில் தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 23 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இப்படத்தை விளம்பரப் படுத்தும் பணிகளுக்காக படக்குழு தற்போது துபாய் சென்றுள்ளது. படக்குழுவுடன் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக ‘83’ படத்தின் கிளிம்ப்ஸ் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.