

'பிரம்மாஸ்த்ரா' படத்தின் தென்னிந்தியப் பதிப்பை ராஜமௌலி வெளியிடுகிறார்.
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளிப்போனது.
சமீபத்தில் 'பிரம்மாஸ்த்ரா' முதல் பாகத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான தென்னிந்தியப் பதிப்பை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
'' 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படத்தை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 'பிரம்மாஸ்த்ரா' படத்தின் கரு தனித்துவமானது. பல வழிகளில், இது ‘பாகுபலி’யின் உழைப்பை எனக்கு நினைவூட்டுகிறது. நான் ‘பாகுபலி’க்கு செய்ததைப் போலவே, 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குநர் அயன் அதிக நேரத்தைச் செலவிடுவதையும், அதைச் சரியாக உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘பாகுபலி'க்குப் பிறகு தர்மா புரொடக்ஷன்ஸ் உடன் மீண்டும் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன்''.
இவ்வாறு ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் இந்திப் பதிப்பை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. தற்போது கரண் ஜோஹர் தயாரித்துள்ள 'பிரம்மாஸ்த்ரா' படத்தின் தென்னிந்தியப் பதிப்பை ராஜமௌலி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.