மகனின் ஜாமீனுக்குப் பிறகு முதல் முறையாக முகம் காட்டிய ஷாரூக்: ரசிகர்கள் மகிழ்ச்சி

மகனின் ஜாமீனுக்குப் பிறகு முதல் முறையாக முகம் காட்டிய ஷாரூக்: ரசிகர்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

மகன் ஆர்யன் கான் ஜாமீனில் வெளியான பிறகு முதல் முறையாக நடிகர் ஷாரூக்கான் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா நோக்கிச் சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

இதையடுத்து, ஆர்யன் கான் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார். மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஷாரூக்கான் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்துவந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று (16.12.21) முதல் முறையாக பிரபல கார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் வீடியோவில் தோன்றி அந்த நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்தார் ஷாரூக்கான். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாரூக்கானைப் பார்த்த மகிழ்ச்சியை அவரது ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஷாரூக்கான் தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் நேற்று இந்திய அளவில் இடம் பிடித்தன.

தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in