‘மாநகரம்’ இந்தி ரீமேக்: டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஜய் சேதுபதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜின் முதல் படமான இது மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்துக்கு ‘மும்பைகர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விக்ராந்த் மாஸ்ஸே, ஹிர்து ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முனிஷ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ‘மும்பைகர்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான டப்பிங் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு தங்கள் சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்துள்ளது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படம் தவிர்த்து இந்தியில் ‘தி ஃபேமிலி மேன்’ இயக்குநர்களான ராஜ் -டிகே இயக்கி வரும் ஒரு வெப் சீரிசிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
