நான் ஒரு நடிகன்; வியாபாரி அல்ல: பங்கஜ் திரிபாதி

நான் ஒரு நடிகன்; வியாபாரி அல்ல: பங்கஜ் திரிபாதி
Updated on
1 min read

விளம்பரப் படங்களில் நடிப்பது குறித்து பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் பங்கஜ் திரிபாதி. ‘கேங்ஸ் ஆஃப் வஸீப்பூர்’, ‘ஸ்ட்ரீ’, ‘மிமி’ உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அமேசான் ப்ரைமில் வெளியான ‘மிர்ஸாபூர்’ வெப் சிரீஸில் இவரது காலீன் பையா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் விளம்பரப் படங்களில் நடிப்பது குறித்து பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார். சமீபத்தில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

''நான் ஒரு நடிகன்; வியாபாரி அல்ல. என்னுடைய நாட்டின் பொறுப்புள்ள ஒரு குடிமகனும் கூட. நான் சொல்வதையும், செய்வதையும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பணத்துக்காக நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? நான் என்னுடைய கலைக்கு உண்மையானவனாக இருந்து வருகிறேன். ஒரு பிரபலமாக என்னுடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

அவர்கள்தான் என்னுடைய படங்களைப் பார்த்து என்னைப் பாராட்டி என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் பயன்படுத்தும் பொருட்களையும், சமூகத்துக்கு எந்தவிதத்திலும் கேடு விளைவிக்காத பொருட்களையும் மட்டுமே நான் விளம்பரப்படுத்த வேண்டும். அதுதான் என்னுடைய பொறுப்பு''.

இவ்வாறு பங்கஜ் திரிபாதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in