Published : 26 Oct 2021 01:53 PM
Last Updated : 26 Oct 2021 01:53 PM

'சர்தார் உத்தம்' ஆஸ்கருக்கு அனுப்பப்படாததற்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு காரணமா? - நடுவர்கள் விளக்கம்

‘சர்தார் உத்தம்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படாததற்கு காரணம் என்ன? என்பதை இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு மார்ச்ச மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்படும் 94-வது அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டுப் பிரிவில் சிறந்த படங்களுக்கான தேர்வுப் போட்டிக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் படம் கடந்தவாரம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட நடுவர்க் குழு இந்திய திரைப்படக் கூட்டமைப்பு அமைத்தது. இக்குழு இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் தமிழிலிருந்து 'கூழாங்கல்' என்ற திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதில் மிகவும் முக்கியமானது ஷூஜித் சிர்கார் இயக்கிய 'சர்தார் உத்தம்'.

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற உத்தம் சிங் வாழ்க்கையை சித்திரிக்கிறது சர்தார் உத்தம் திரைப்படம். கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மத்திய ஆசிய சங்கத்தின் கூட்டுக் கூட்டத்தில் டயர் பேசவிருந்தபோது, ​​லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் அவரை சுட்டுக் கொன்றுவிடுகிறார் உத்தம் சிங். உன்னதமான ஓர் சுதந்திர வீரனின் வாழ்க்கையை கடும் போராட்டங்களுடன் இப்படம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்களின் பாராட்டை அள்ளிக்குவித்துள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'சர்தார் உத்தம்' போன்ற படங்கள் போட்டிக்கு அனுப்பப்படாதது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படாதற்கான காரணத்தை நடுவர்க் குழு உறுப்பினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உறுப்பினர் இந்திரதீப் தாஸ்குப்தா கூறுகையில், 'சர்தார் உத்தம்' திரைப்படம் நல்ல படம்தான். ஆனால் இப்படம் அதிகம் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை சித்தரிக்கிறது, மேலும் இப்படம் ஜாலியன்வாலா பாக் சம்பவத்தைப் பற்றி கொஞ்சம் நீளமாகவே சித்திரிக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு போராளியைப் பற்றி பெரும் பொருட்செலவில் படம் எடுப்பது நேர்மையான முயற்சி என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால் திரைப்பட உருவாக்கத்தில், அது மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை வெளிப்படுத்துவதாகத்தான் இது இருக்கிறது. உலகமயமாக்கலின் இந்த காலகட்டத்தில், இந்த வெறுப்பை இன்னமும் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. மற்றபடி படத்தின் தயாரிப்பு சர்வதேச தரத்தில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது'' என்றார்.

நடுவர் குழுவின் மற்றொரு உறுப்பினரான சுமித் பாஸுவும், '' சர்தார் உத்தம் படத்தின் கேமராவொர்க், எடிட்டிங், ஒலி வடிவமைப்பு மற்றும் காலத்தின் அசலான சித்தரிப்புக்காக எடுத்துக்கொண்ட பொருட்செலவு உள்ளிட்ட சினிமா தரத்திற்காக பலர் சர்தார் உத்தமை விரும்பினர். இவ்வளவு சிறப்பு இருந்தும் இப்படத்தின் முக்கிய பிரச்சினை படத்தின் நீளம். படத்தின் முக்கிய இடமான க்ளைமாக்ஸ் பகுதிக்கு வர மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் தியாகிகளின் உண்மையான வலியை ஒரு பார்வையாளர் உணர இது நிறைய நேரம் எடுக்கும்.

ரசிகர்கள் கண்டனம்

ஆனால் சமூக வலைதளங்களின் பதிவர்கள், நடுவர்க் குழுவினரின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளை எழுப்பி வருகின்றனர். அவர்களில் ஒருவர் எழுதினார், “இந்த வெறுப்பை இன்னமும் தூக்கி பிடிக்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள். ஆனால், இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட கோஹினூர் வைரத்தையும், சுமார் 45 டிரில்லியன் டாலர் செல்வங்களையும் வைத்திருக்க மாட்டீர்கள் என்று நீங்கள் உறுதியளித்தால் நிச்சயமாக நாங்கள் வெள்ளையர்கள் மீது வெறுப்புகொள்ள மாட்டோம். '' என்று தெரிவித்திருந்தார்.

மற்றொருவர் கூறுகையில் “உண்மையை அடக்குகிறார்கள்! எப்பொழுதும் போல்!" மற்றொருவர் எழுதினார், “இப்படம் யதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லையா. இது ஒன்றாம் அல்லது இரண்டாம் உலகப் போர் பற்றிய படமாக இருந்தால் என்ன செய்வீர்கள். ஹிட்லரின் ஜெர்மனியின் யதார்த்தத்தை சித்தரிப்பதால் நீங்கள் அதை நிராகரிப்பீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூரிகளின் இந்த முடிவுக்கு இவ்வாறு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x