

பாலிவுட் நட்சத்திரம் ராணி முகர்ஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் 'மர்தானி' படத்தின் ட்ரெய்லரில் இன்று வெளியிடப்பட்டது.
பாலிவுட்டில் நடிப்புக்கு புகழ்பெற்ற ஒரு சில நடிகைகளில் ராணி முகர்ஜியும் ஒருவர். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராணி முகர்ஜி, இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நாயகியை மையப்படுத்தி பல திரைப்படங்கள் பாலிவுட்டில் தற்போது உருவாகி வருகிறது. அந்த வரிசையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து, இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. கடத்தலை விசாரிக்கும் அதிகாரியாக ஷிவானி சிங் ராய் என்ற பாத்திரத்தில் ராணி முகர்ஜி நடிக்கிறார்.
ட்ரெய்லரில் அதிரடியைக் காண்பித்துள்ள அவர், முன்னணி ஹீரோக்களைப் போல வில்லனுக்கு சவால் விடும் வசனங்களையும் பேசுகிறார். ராணி முகர்ஜி ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வெளியாகிறது.
இத்திரைப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனத்தின் தயாரிப்பாக, ராணி முகர்ஜியின் கணவர் ஆதித்யா சோப்ரா தயாரிக்க, பிரதீப் சர்க்கார் இயக்குகிறார்.