

நான் எனக்குப் போட்டியாக ஹாலிவுட்டை நினைக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் சயின்ஸ் ஃபிக்ஷன், மாய மந்திரம், சூப்பர்ஹீரோக்கள் படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
இது பற்றி மேலும் பேசியுள்ள பி.சி.ஸ்ரீராம், "லண்டனில் திரைப்பட திரையிடலே (ப்ரொஜக்ஷன்) தரமானதாக இல்லை. இதற்கு முன் அங்கு அப்படி இல்லை. என்னைப் பொருத்தவரையில் ஹாலிவுட்டை அண்ணாந்து பார்க்கும் மாயை குறைந்துவிட்டது. அவர்கள் கிராபிக்ஸ் வைத்து மாயாஜாலப் படங்களை எடுத்து வருகின்றனர்.
சூப்பர் மேன், பேட்மேன் போன்ற படங்களையே அடிக்கடி எடுப்பதால் தான் கேம் ஆஃப் த்ரான்ஸ், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் போன்ற டிவி தொடர்களின் பக்கம் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது. தொடர்ந்து மாயாஜாலப் படங்களே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டைப் போல தரமான வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும்.
பல விஷயங்கள் பெரிய மாற்றங்கள் கண்டுள்ளன. இந்திய சினிமா நம்பமுடியாத வளர்ச்சியை பார்த்துள்ளது. உலகம் முழுவதும் இந்திய சினிமாக்கள் பார்க்கப்படுகின்றன. நமது சினிமாக்களுக்கான சந்தை வளர்ந்துள்ளது.
ஹாலிவுட் நமது போட்டியல்ல. அவர்கள் தான் நம்மை போட்டியாக நினைக்க வேண்டும். ஏனென்றால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால், (தொழில்நுட்ப ரீதியாக) உலகம் முழுவதும் சினிமா எடுக்கும் முறை ஒரே மாதிரி மாறியுள்ளது.
நான் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி, ஷ்யாம் பெனகல், ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோரின் படங்கள் பார்த்து வளர்ந்தேன். இந்தியில் பல வாய்ப்புகள் வருகின்றன. நான் அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது. இப்போது எனக்கு தேவையானதை மட்டும் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது" என்று தெரிவித்தார்.
பி.சி.ஸ்ரீராம் இந்தியில் இயக்குநர் பால்கியின் 'கி அண்ட் கா' படத்தில் பணிந்துள்ளார். படம் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது